உங்கள் செல்போன் எண் சிறப்பு குலுக்கலில் கோடிக் கணக்கான ரூபாய் பரிசு வென்றிருப்பதாக எஸ்.எம்.எஸ். மூலமாகவும், அல்லது நீங்கள் லாட்டரியில் 5 லட்சம் பவுண்டுகள் அல்லது டாலர் கள் பரிசு பெற்றிருப்பதாக உங்கள் இ-மெயில் முகவரிக்கும் தகவல் அனுப்பி, மேற்கொண்டு விபரம் அறிய ஒரு குறிப்பிட்ட இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு உங்கள் மொபைல் போனுக்கோ இ-மெயில் முகவரிக்கோ அடிக்கடி தகவல் வரும்.
இதை உண்மை யென நம்பி அந்த இ-மெயில் முகவரியை தொடர்பு கொண்டால் உங்களுக்கான கோடிக்கணக்கான ரூபாய் பரிசு தயாராக இருப்பதா கவும், அதை முறைப்படி அனுப்ப சேவை வரி, சுங்க வரி, கலால் வரி, பேங்க் கிளியரன்ஸ் கமிஷன் ஆகியவற்றுக்காக ரூபாய் 2 லட்சமோ 3 லட்சமோ ஒரு குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் செலுத்துமாறும் உங்களுக்கு தகவல் கிடைக்கும். அதை நம்பி நீங்கள் பணத்தை வங்கிக் கணக்கில் போட்டால், இன்னும் கொஞ்சம் பணம் போடச் சொல்லி மீண்டும் உங்கள் இ-மெயிலுக்கு தகவல் வரும். இப்படியே, கொஞ்சம் கொஞ்சமாக உங்களிடமிருந்து கறந்து விட்டு, நீங்கள் ஏமாந்து விட்டதாக உணரும்போது தொடர்பு நின்று விடும்.
இவ்வாறு ஏமாந்தவர்கள் அவ்வப்போது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்து புகார் கொடுத்த வண்ணம் இருக்கிறார்கள். கடைசியாக புகார் கொடுக்க வந்தவர் ஏமாந்த தொகை ரூ.35 லட்சம் ஆகும். மிக நெருங்கிய நண்பர்கள் (அ) உறவினர்களே 5000 ரூபாயோ 10,000 ரூபாயோ கடன் கொடுக்க முன்பின் யோசிக்கும் இந்தக் காலத்தில் முகம் தெரியாத யாரோ ஒருவர், விண்ணப்பிக்காத போட்டிக்கும் கலந்து கொள்ளாத லாட்டரியிலும் கிடைக்கும் கோடிக்கணக்கான பணத்தை உங்களுக்கு அனுப்பப்போவதாக கூறுவதை சிறிதும் நம்ப வேண்டாம்.
இம்மாதிரி எஸ்.எம்.எஸ்.களையும் இ-மெயில்களையும் புறக்கணிக்க வேண்டும். இதேபோன்று, கணக்கு வைத்திருக்கும் வங்கியிலிருந்தோ, ரிசர்வ் வங்கியிலிருந்தோ, செக் செய்வதற்காக அல்லது ஆடிட் நோக்கத்திற்காக அல்லது பாதுகாப்பு காரணத்துக்காக அல்லது கணக்கு சரி செய்வதற்காக என்று உங்கள் வங்கிக்கணக்கு விபரங்களைக் கேட்டு உங்களுக்கு இ-மெயில் வந்தாலும் அல்லது அநாதை ஆசிரமத்திற்கு உங்களை செயலராக நியமிப்பதாக இ-மெயில் வந்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
இவ்வாறு உங்களுக்கு வரும் இ-மெயில்கள் போலியா னவை. ரிசர்வ் வங்கி தனி நபர்களின் வங்கிக் கணக்கு விஷயங்களில் நேரடியாக தலையிடுவதில்லை. உங்கள் வங்கிக்கே உங்கள் கணக்கின் ரகசிய குறியீடு எண்களைக் கேட்க அதிகாரமில்லை. இதை நம்பி உங்கள் கணக்கு விபரங்களை அளித்தால் உடனடியாக உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணம் முழு வதும் சுருட்டப்பட்டு விடும். பொதுவாக, விளம்பரங்களை நம்பி, முறையாக விசாரிக்காமல் வேலை வாய்ப்புக்காகவோ, வேறு சேவைகளுக்காகவோ ஆன்லைனில் பணம் அனுப்பு வதும் தேவையற்றது.
பணப் பரிவர்த்தனை தொடர்பான சைபர் குற்றங்களில் எதிரிகள் பிடிபட்டாலும் பணத்தை மீட்பது கடினம். எனவே, சைபர் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment