Friday, 3 June 2011

சமச்சீர் புத்தகங்கள் : ஜுன் 8 வரை எந்த நடவடிக்கையும் இல்லை


சென்னை உயர்நீதிமன்றத்தில் சமச்சீர் கல்வி குறித்த வழக்கு விசாரணை ஜுன் 8ம் தேதி வரவிருக்கும் நிலையில், அதுவரை சமச்சீர் கல்வி புத்தகங்களை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் வி. ராமசுப்ரமணியன், ஜி.எம். அக்பர் பலி, அட்வகேட் ஜெனரல் ஏ. நவநீத கிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு, சமச்சீர் கல்வி தொடர்வது குறித்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.

கடந்த திமுக ஆட்சி காலத்தில் சமச்சீர் கல்வி முறை 1 மற்றும் 6ம் வகுப்பிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 2011-12 கல்வி ஆண்டில் இருந்து 1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறையை கொண்டு வர திட்டமிட்டு புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அ.இ.அ.தி.மு.க. அரசு அமைந்ததைத் தொடர்ந்து, சமச்சீர் கல்வி முறையை ரத்து செய்துவிட்டு பழைய பாடத்திட்டமே நடைமுறையில் இருக்கும் என்று அறிவித்தது.

இந்த நிலையில், இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜுன் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment