ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவ் அப்புறப்படுத்தப்பட்டார். அவருடைய ஆதரவாளர்கள் தடியடி நடத்தி கலைக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று ஓர் இந்தி பத்திரிகையின் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன்சிங்கிடம் நிருபர்கள் இதுபற்றி கேட்டனர். அதற்கு மன்மோகன்சிங் கூறியதாவது:-
போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது, துரதிருஷ்டவசமானது. ஆனால் அதைத் தவிர வேறு வழி இல்லை. ஊழலை ஒழிப்பதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. ஊழல் மற்றும் கறுப்பு பணம் தொடர்பாக கவலை அடைந்துள்ளது.
அதில் சந்தேகம் இல்லை. ஆனால் ஊழலை ஒழிப்பதற்கு மந்திரக்கோல் ஏதும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, இந்தி பத்திரிகை விருது வழங்கும் விழாவில் மன்மோகன்சிங் பேசியதாவது:-
பத்திரிகை துறையில் இருப்பவர்கள், பரபரப்புக்காக செய்தி போடுவதற்காக உண்மைகளை திரித்து வெளியிடுவது, சமூகத்துக்கு பெரும் தீங்கு விளைவிக்கும். பத்திரிகையாளர்கள் தாங்கள் வெளியிடும் செய்திகளில் கவனமாக இருக்க வேண்டும். சமூகத்திற்கு கெடுதலான விஷயங்களை தூண்டிவிடக் கூடாது.
பணம் வாங்கிக்கொண்டு செய்தி வெளியிடும் வியாதி, கவலைக்குரியது. அற்ப லாபங்களுக்காக பத்திரிகையாளர்கள் தங்கள் கவுரவத்தை தாழ்த்தி கொள்வது துரதிருஷ்டவசமானது. பின்தங்கிய மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து உறுதியான விவாதம் நடத்த ஏற்பாடு செய்வது அனைத்து தரப்பு பத்திரிகைகளின் கடமை.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment