ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே நடத்திய போராட்டத்துக்கு நாடுமுழுவதும் ஆதரவு பெருகியது. இந்த நிலையில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் இப்போது பிரபல யோகா குரு பாபாராம்தேவும் இறங்கி உள்ளார்.
வருகிற 4-ந்தேதி முதல் அவர் டெல்லியில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். அவரை சமாதானப்படுத்த மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. திட்டமிட்டபடி உண்ணாவிரதம் நடந்தே தீரும் என்று அறிவித்துள்ளார்.
பாபாராம்தேவ் டெல்லி யில் உண்ணாவிரதம் இருக்கும் போது நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்கள், மாநில தலைநகரங்களில் அவரது சீடர்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளார்கள்.
இந்த அமைப்பின் தமிழ் நாடு பொறுப்பாளரான சம்பத்குமார் கூறியதாவது:-
ஊழலை ஒழிக்க பாபா ராம்தேவ் எடுத்து வரும் முயற்சிகளுக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. தமிழகத்திலும் எல்லா மாவட்டங்களிலும் எங்கள் யோகா மையங்கள் செயல்பட்டு வருகிறது.
ஊழலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட கிராமம் கிராமமாக ஆதரவு திரட்டி வருகிறோம். அனைத்து மாவட்டங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 4-ந்தேதி 25 மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.
சென்னையில் எங்கள் அமைப்பு வலுவாக உள்ளது. 10 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். தினமும் 3 ஆயிரம் பேர் யோகா பயிற்சி எடுத்து வருகிறார்கள். 120 மையங்களில் யோகா இலவசமாக கற்று தரப்படுகிறது. நாடு முழுவதும் காலை 6 முதல் 7 மணிவரை யோகா நடக்கிறது.
அதே நேரத்தில் சென்னையில் பல பூங்காக்களில் யோகா இலவசமாக கற்று தரப்படுகிறது. 500 யோகா ஆசிரியர்கள் சம்பளம் இல்லாமல் இலவசமாக பயிற்சி அளிக்கிறார்கள். சென்னையில் அண்ணாசாலை மின்வாரிய அலுவலகம் அருகே 4-ந்தேதி காலை 9 மணிக்கு உண்ணாவிரத போராட்டம் தொடங்கும்.
சென்னை உள்பட மாநிலம் முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரளுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். பல்வேறு அமைப்புகளுக்கும் கடிதம் எழுதி உள்ளோம். நாட்டின் நிர்வாக முறையை மாற்றி அமைக்கும் இந்த போரில் நாட்டு நலனில் அக்கறை உள்ள அனைவரும் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment