Monday, 6 June 2011

லஞ்சத்தை ஒழிக்க "இளைஞர் இயக்கம்' : அப்துல் கலாம்

நாட்டின் மிகப்பெரிய வியாதியாக உள்ள ஊழலை ஒழிக்க, இளைஞர்கள் இயக்கத்தை துவக்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.
விழுப்புரத்தில் சமூக நல கூட்டமைப்புகள் சார்பில் 2020ல், விழுப்புரத்தின் முன்னேற்றம் என்ற தலைப்பில் (லீடு விழுப்புரம் 2020) நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: விழுப்புரத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, "லீடு விழுப்புரம் 2020' திட்டத்தை ஒருங்கிணைந்து செயல்படுத்துவது சிறப்பம்சம். இத்திட்டத்தின் மூலம், 6.5 கோடி மரக்கன்றுகளை நட்டு சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் செயல், பாராட்டத்தக்கது. ஒவ்வொரு மரமும், ஓராண்டில் 20 கிலோ கிராம் கார்பன் டை ஆக்சைடை உள்வாங்கி அழிக்கிறது; 14 கிலோ ஆக்சிஜனை வெளியிடுகிறது.விழுப்புரத்தில் நட உள்ள, 6.5 கோடி மரக்கன்றுகள், 15 லட்சம் டன் கார்பன் டை ஆக்சைடை அழித்து, 10 லட்சம் டன் ஆக்சிஜனை வெளியிடும். சுற்றுச்சூழலை பாதுகாத்து, நாட்டை வளப்படுத்தும் நிலைப்பாட்டை, மக்களிடம் கொண்டு வர வேண்டும்.

இது, மாவட்டங்கள் தோறும் செயல்படுத்தக் கூடிய திட்டம். அறிவியல் தாக்கத்தை மாணவர்கள் மத்தியில் வளர்க்க, அறிவியல் கண்காட்சி அமைத்திருப்பது சிறப்பு. இதன் மூலம் இளம் விஞ்ஞானிகளை கண்டெடுத்து அவர்களது திறனை வெளிக்கொணர்வது, இளைஞர் சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல ஒரு தூண்டுகோளாக இருக்கும்.உங்கள் முயற்சி, ஒரு சமூக பொருளாதார மாற்றத்தை கொண்டு வந்து, தமிழகத்தை ஒரு வளமான நாடாக்கும் திட்டத்தில் முதல் மாவட்டமாக செயல்பட்டு திருப்புமுனையை ஏற்படுத்தும்.

மாணவர்களே, உங்கள் வாழ்வின் லட்சியம் என்ன... எத்தனை பேர் இன்ஜினியர், டாக்டர், ஐ.ஏ.எஸ்., ஆசிரியர்கள் ஆக கனவு காண்கிறீர்கள். எத்தனை பேர் விண்வெளியில் நடக்க விரும்புகிறீர்கள். கடந்த 12 ஆண்டுகளில், 1.2 கோடி இளைஞர்களிடம் கலந்துரையாடியுள்ளேன். அவர்களின் கனவுகளை அறிந்து வைத்திருக்கிறேன்.சமீபத்தில், மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில், ஒரு லட்சம் இளைஞர்கள் மத்தியில் நடந்த கூட்டத்தில், "இன்ஜினியர், டாக்டர், ஐ.ஏ.எஸ்., ஆகப் போவது யார்?' என கேட்டபோது, சில 100 பேர், கை தூக்கினர். "எத்தனை பேர் சந்திரன், வியாழன் கிரகத்திற்கு போக விரும்புகிறீர்கள்?' என கேட்டபோது, அனைவரும் கை தூக்கினர்.

அதில் ஐந்து பேரை தேர்வு செய்து, "நீங்கள் அரசியல் தலைவரானால், என்ன செய்வீர்கள்?' என கேட்டேன். "10 ஆண்டில் வளர்ந்த நாடாக மாற்றுவேன், லஞ்சத்தை ஒழிப்பேன்' என்றும், "இளைஞர்களிடம் என்னால் முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்து, இந்தியாவால் முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்குவேன்' என, ஒரு மாணவன் கூறினான். எங்கு சென்றாலும், இளைஞர்களிடம் நம்பிக்கை, லட்சியம், கனவைப் பார்க்கிறேன்.வளமான இந்தியாவை வழி நடத்தும் தலைவர்களை உருவாக்க வேண்டும். இப்படிப்பட்ட இந்தியாவை படைக்க, எழுச்சி எண்ணம் கொண்ட இளைஞர்கள் வேண்டும். உறக்கத்தில் வருவதல்ல கனவு. உன்னை உறங்க விடாமல் செய்வது தான் கனவு. எனவே, கனவு காண்பது அவசியம். லட்சியம் வேண்டும். அது நிறைவேற கடின உழைப்பு, அறிவும், அதை தொடர்ந்து செல்ல வேண்டும். தோல்வி மனப்பான்மையை தோல்வி அடைய செய்ய வேண்டும்.

நாட்டின் மிகப்பெரிய வியாதியாக ஊழல் உள்ளது. அதை எப்படி ஒழிப்பது என இளைஞர்கள் கேட்கின்றனர். ஊழலை ஒழிக்க பல சட்டங்கள் உள்ளன. பலர் கைது செய்யப்படுகின்றனர். சிலர் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுகின்றனர். லஞ்சம் வீட்டிலிருந்து தான் துவங்குகிறது.இந்தியாவில் உள்ள 200 மில்லியன் வீடுகளில், 80 மில்லியன் வீடுகளில் உள்ளவர்கள் லஞ்சத்தில் ஈடுபடுவதாக வைத்துக் கொண்டால், எப்படி லஞ்சத்தை ஒழிக்க முடியும். அதை பார்த்து வளரும் இளைஞர்கள் மனம் எப்படி இருக்கும். அன்பு, பாசம் என்ற மிகப்பெரிய ஆயுதத்தை இளைஞர்கள் பெற்றோர் மீது பிரயோகித்தால், அவர்கள் லஞ்சத்தை விட்டு வெளியே வருவர் என்பது என் கருத்து.

ஒவ்வொருவரும் தன் குடும்பத்தில் இந்த மாற்றத்தை கொண்டு வந்தால், நல்ல சமுதாயம் உண்டாகும்; நல்ல தலைவர்கள் கிடைப்பர்; நாடு ஊழலில் இருந்து விடுபடும். ஆனால் ஒரு தலைவனால், கட்சியால், மீடியாவால், சட்டத்தால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியாது. நாடு மாற வேண்டுமெனில் வீடு மாற வேண்டும்.இந்த மாற்றத்தை ஏற்படுத்த, இளைஞர்கள் இயக்கத்தை துவக்கியுள்ளேன். எனக்கு வேண்டும் என்ற சுய நல எண்ணம் தான் லஞ்சம் வாங்கத் தூண்டுகிறது. நாம் எண்ணத்தை மாற்றி வீட்டை, குடும்பத்தை தூய்மையாக்கினால் நாடு மாறும். இளைஞர்கள் இதற்கு தயாரானால்; வாருங்கள் வந்து இயக்கத்தை வலுப்படுத்துங்கள். என்னுடைய இணைய தளத்தில் (www.abdulkalam.com) தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.

சி.பி.ஐ.,யிடம் சிவசங்கரன் பரபரப்பு வாக்குமூலம் : தயாநிதிக்கு முற்றுகிறது நெருக்கடி?

புதுடில்லி : "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ., வசம் , "ஏர்செல்' நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சிவசங்கரன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். "ஏர்செல் நிறுவனத்தை மலேசிய நிறுவனத்திற்கு விற்பதற்கு, தயாநிதி கொடுத்த நெருக்கடியே காரணம்' என்று, வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பகீர் வாக்குமூலத்தால், தயாநிதிக்கு நெருக்கடி முற்றுகிறது

காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசில், கடந்த 2004-07ம் ஆண்டு, மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி இருந்தார். அந்த காலகட்டத்தில், "டிஷ்நெட் வயர்லெசு'க்கு (ஏர்செல்)14 லைசென்ஸ்கள் வழங்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது. கடந்த, 2006ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் சிவசங்கரன், தான் நடத்தி வந்த ஏர்செல் கம்பெனிக்கு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கேட்டு விண்ணப்பித்து இருந்தார். லைசென்ஸ் கோரி தாக்கல் செய்யப்பட்ட மொத்தம், 14 மனுக்கள், 2006ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி நிலவரப்படி நிலுவையில் இருந்துள்ளன. அவர் பலமுறை முயன்றும், லைசென்ஸ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், தொலைத்தொடர்புத் துறையில் அன்னிய நிறுவனங்கள், 74 சதவீதம் வரை முதலீடு செய்யலாம் என்று, மத்திய அரசு அனுமதியளித்தது. இதையடுத்து, சிவசங்கரனின் ஏர்செல் கம்பெனி, மலேசியாவைச் சேர்ந்த, "மேக்சிஸ்' கம்பெனிக்கு கைமாறியது.

ஏர்செல் நிறுவனமாக இருந்த போது கோரிய லைசென்ஸ், அது மலேசிய நிறுவனத்திற்கு கைமாறிய உடனேயே, 14 லைசென்ஸ்கள் வழங்கப்பட்டன. இதற்கு சன்மானமாக மேக்சிஸ், தனது சக கம்பெனிகள் மூலம், "சன் டைரக்ட்' கம்பெனியில், முதலீடு செய்தது.இந்த, "சன் டைரக்ட்' நிறுவனம், வீடுகளுக்கு நேரடி, "டிவி' ஒளிபரப்பு செய்யும், "டிடிஎச்' நிறுவனம். தயாநிதியின் சகோதரர் கலாநிதி நடத்தும், "சன் டிவி' குழுமத்தின் ஒரு அங்கம். இதனால் பாதிக்கப்பட்ட சிவசங்கரன், சி.பி.ஐ.,யில் புகார் தெரிவித்தார்.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் குறித்து, சி.பி.ஐ., தீவிர விசாரணை நடத்தி வருகிறது. முதலில் வருபவர்களுக்கு முதல் வாய்ப்பு என்ற அடிப்படையில், அனுபவம் இல்லாத கம்பெனிகளுக்கு எல்லாம் ஒதுக்கீடு அள்ளிவீசப்பட்டுள்ளது.

எனவே, இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய நீதிபதி, கடந்த 2001ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை நடந்துள்ள ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள் குறித்து, முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார். இதனால், இந்த விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுத்தது.

இதைத்தொடர்ந்து கடந்த, 2003-04ம் ஆண்டு மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த அருண் ÷ஷாரியிடம், கடந்த பிப்ரவரி 25ம் தேதி சி.பி.ஐ., விசாரணை நடத்தி, அவரது ஆட்சிக் காலத்தில் நடந்த ஒதுக்கீடுகள் குறித்து விசாரணை நடத்தியது.இதைத்தொடர்ந்து கடந்த மாத மத்தியில், தொழில் அதிபர் சிவசங்கரன், சி.பி.ஐ., வசம் அளித்த மனுவில்,"எனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய ஒதுக்கீடு கிடைக்கவில்லை. அதனால், ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவின், "மேக்சிஸ்' நிறுவனத்திற்கு விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். இதற்கு தயாநிதி மாறனே காரணம்' என்று புகார் செய்திருந்ததாக செய்திகள் வெளியாகின. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக முழு விசாரணை நடத்த, சி.பி.ஐ.,க்கு உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனால், சி.பி.ஐ., எந்நேரமும் சிவசங்கரனிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

வாக்குமூலம்: இந்நிலையில், சிவசங்கரன் நேற்று, சி.பி.ஐ., அதிகாரிகள் முன் ஆஜராகி, தான் தெரிவித்த புகார் தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதில், ஸ்பெக்டரம் ஒதுக்கீடு தொடர்பாக தான் விண்ணப்பித்தது முதல், உரிமம் கிடைக்காததால், மலேசிய நிறுவனத்திற்கு விற்றது வரை, நடந்த அனைத்து உண்மைகளையும் விரிவாக எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது. மலேசிய நிறுவனத்திற்கு, ஏர்செல் நிறுவனத்தை விற்பதற்கு, தயாநிதி கொடுத்த நெருக்கடியே காரணம்' என்று, அவர் உறுதிப்பட தெரிவித்ததாக கூறப்படுகிறது.சி.பி.ஐ., வசம் சிவசங்கரன் எங்கே வாக்குமூலம் அளித்தார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், ஏர்செல் நிறுவனம் மலேசிய நிறுவனத்திற்கு விற்கப்பட்டதற்கு பிறகு, சன் "டிவி'க்கும் மேக்சிஸ் நிறுவனத்திற்கும் இடையே நடந்த நிதி பரிவர்த்தனைகள் குறித்து, சி.பி.ஐ., பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த துவங்கியுள்ளது. இதனால், தயாநிதிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தயாநிதி மறுப்பு: இந்நிலையில், தயாநிதி தன் மீதான குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையில்,"நான் குற்றமற்றவன் என்பதை முறையான அமைப்பிடம் நிரூபிப்பேன்' என்றார்.

பிரதமர் மவுனம் கலைந்தது : ""தயாநிதி விவகாரத்தை, சட்ட அமலாக்க நிறுவனங்கள் கவனித்து வருகின்றன. பாரபட்சம் இல்லாமல் நடுநிலையுடன் அவர்கள் செயல்பட அனுமதிக்கப்படுவர்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், தயாநிதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங் பதில் அளிக்காமல், மவுனம் காத்து வருகிறார். அவர் வாய் திறக்க வேண்டும் என, பா.ஜ., உட்பட எதிர்க்கட்சிகள் கோரி வந்தன.

இந்நிலையில், நேற்று நிருபர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ""தயாநிதி விவகாரத்தை, சட்ட அமலாக்க அமைப்பைச் சேர்ந்தவர்கள் கவனித்து வருகின்றனர். அவர்கள் நடுநிலையுடன் செயல்பட அனுமதிக்கப்படுவர். ஊழலை எதிர்த்து போராட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம். இருந்தாலும், லஞ்சத்தை ஒரே அடியாக ஒழிக்க, கையில் மந்திரக்கோல் எதுவும் கிடையாது.""யோகா குரு பாபா ராம்தேவிற்கு எதிரான போலீஸ் நடவடிக்கை துரதிருஷ்டவசமானது. இருந்தாலும், அதைத் தவிர வேறு வழியில்லை. லோக்பால் அமைப்பின் விசாரணை வரம்பிற்குள் பிரதமரை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. இந்தப் பிரச்னை, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கூட்டுக் குழுவின் பரிசீலனையில் உள்ளது,'' என்றார்.

ஒரே நாளில் திருப்பதி கோவிலில் 1 லட்சம் பேர் தரிசனம்

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 15-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திருப்பதி கோவிலில் குவிந்துள்ளனர்.
நேற்று மட்டும் சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்திற்கு 8 மணி நேரம் வரையிலும், ரூ. 300 கட்டண தரிசனத்திற்கு 5 மணி நேரமும் ஆகிறது.
அன்னதான கட்டிடம், மொட்டை போடும் இடம், லட்டு கவுண்டர் ஆகிய பகுதிகளில் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிவதால் பக்தர்கள் திறந்தவெளி பகுதிகளில் தங்கி இருந்தனர்.
கோவிலுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் இருப்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவிலைச் சுற்றி ஏராளமான அதிரடிப் படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்பார்த்த அளவை விட சந்திரனில் அதிக அளவில் சுத்தமான தண்ணீர் உள்ளது;விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

பூமியின் துணை செயற்கைக்கோளான சந்திரனில் நிறைய கனிம வளம் இருப்பதாக முதலில் கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் தண்ணீர் வளம் உள்ளதாப என்பது பல தடவை ஆராய்ச்சிகள் செய்த பிறகும் உறுதிபடுத்தப் படாமல் இருந்தது. சந்திரனை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பிய சந்திராயன் மிகத்திறமையாக ஆய்வு செய்து சந்திரனில் தண்ணீர் இருப்பதை கண்டு பிடித்தது.
 
அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளும் அதை உறுதி செய்தனர். இதையடுத்து சந்திரனில் என்னென்ன வளங்கள் உள்ளது என்பதை கண்டு பிடிக்க நாடுகளிடம் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, சீனா, ரஷியா, இந்தியா ஆகிய நாடுகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்கிடையே சந்திரனில் நாம் எதிர்பார்ப்பதை விட அதிக தண்ணீர் வளம் உள்ளதாக அமெரிக்காவில் உள்ள கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் யுனிவர்சிட்டி, கர்ஜினிஅறிவியல் கழகம், பிரவுன் யுனிவர்சிட்டி விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
 
இதுவரை கணிக்கப்பட்டுள்ள அளவை 100 மடங்கு அதிக சுத்தமான தண்ணீர் நிலாவில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். இது சந்திரன் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ள எல்லா நாட்டு விஞ்ஞானிகளிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொசுவை விரட்ட புதிய வகை கியாஸ்; இந்திய வம்சாவழி விஞ்ஞானி கண்டு பிடித்தார்

கொசு கடிப்பதால் மலேரியா உள்ளிட்ட பல்வேறு நோய்கள் மனிதனை தாக்குகின்றன. எனவே கொசுவை ஒழிக்க எத்தனையோ முயற்சிகள் எடுக்கப்பட்டும் இதுவரை அதில் வெற்றி கிடைக்கவில்லை. தற்போது கொசுவை விரட்டுவதற்காக ரசாயன மருந்துகளை கொண்ட கொசுவர்த்தி போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் இவை மனிதர்களுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவழியை சேர்ந்த விஞ்ஞானி தலைமையிலான ஒரு குழுவினர் கொசுவை விரட்டுவதற்கான புதிய வகை கியாஸ் ஒன்றை கண்டுபித்துள்ளனர்.
இதை நாம் படுத்திருக்கும் அறையில் பரவவிட்டால் கொசுக்கள் அங்கிருந்து ஓடிவிடும். பொதுவாக கொசுக்கள் மனிதனின் ரத்த வாடையை மோப்பம் மூலம் உணர்ந்து தான் நம்மை கடிக்கின்றன. ஆனால் இந்த கியாசை அறைக்குள் பரவவிட்டால் கொசுக்களுக்கு ரத்த வாடை தெரியாமல் குழப்பம் ஏற்படுத்துகின்றன.
எனவே மனிதனை கொசுக்கள் கடிக்காமல் அங்கிருந்து ஓடிவிடுகின்றன. விரைவில் இந்த கியாஸ் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த கியாஸ் பக்க விளைவுகளை ஏற்படுத்தாது என்று விஞ்ஞானிகள் கூறினார்கள். கொசுக்களினால் பரவும் மலேரியா நோயால் உலகில் ஆண்டுக்கு 5 லட்சம் பேர் பலியாகிறார்கள்.
அதாவது 30 வினாடிக்கு ஒருவர் உயிர் இழக்கின்றார். இந்த புதியவகை கியாசால் மலேரியா நோய் பெருமளவு கட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாபா ராம்தேவ் ஆதரவாளர்கள் மீது போலீஸ் தடியடி நடத்துவதை தவிர வேறு வழி இல்லை: மன்மோகன்சிங்

ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவ் அப்புறப்படுத்தப்பட்டார். அவருடைய ஆதரவாளர்கள் தடியடி நடத்தி கலைக்கப்பட்டனர்.
 
 இந்நிலையில், நேற்று ஓர் இந்தி பத்திரிகையின் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன்சிங்கிடம் நிருபர்கள் இதுபற்றி கேட்டனர். அதற்கு மன்மோகன்சிங் கூறியதாவது:-
 
போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது, துரதிருஷ்டவசமானது. ஆனால் அதைத் தவிர வேறு வழி இல்லை. ஊழலை ஒழிப்பதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. ஊழல் மற்றும் கறுப்பு பணம் தொடர்பாக கவலை அடைந்துள்ளது.
 
அதில் சந்தேகம் இல்லை. ஆனால் ஊழலை ஒழிப்பதற்கு மந்திரக்கோல் ஏதும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, இந்தி பத்திரிகை விருது வழங்கும் விழாவில் மன்மோகன்சிங் பேசியதாவது:-
 
பத்திரிகை துறையில் இருப்பவர்கள், பரபரப்புக்காக செய்தி போடுவதற்காக உண்மைகளை திரித்து வெளியிடுவது, சமூகத்துக்கு பெரும் தீங்கு விளைவிக்கும். பத்திரிகையாளர்கள் தாங்கள் வெளியிடும் செய்திகளில் கவனமாக இருக்க வேண்டும். சமூகத்திற்கு கெடுதலான விஷயங்களை தூண்டிவிடக் கூடாது.
 
பணம் வாங்கிக்கொண்டு செய்தி வெளியிடும் வியாதி, கவலைக்குரியது. அற்ப லாபங்களுக்காக பத்திரிகையாளர்கள் தங்கள் கவுரவத்தை தாழ்த்தி கொள்வது துரதிருஷ்டவசமானது. பின்தங்கிய மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து உறுதியான விவாதம் நடத்த ஏற்பாடு செய்வது அனைத்து தரப்பு பத்திரிகைகளின் கடமை.
 
இவ்வாறு அவர் பேசினார்.

கோடிக்கணக்கான ரூபாய் பரிசு: முகவரி இல்லாத இ-மெயில்- எஸ்.எம்.எஸ்.களை நம்ப வேண்டாம்; போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 
உங்கள் செல்போன் எண் சிறப்பு குலுக்கலில் கோடிக் கணக்கான ரூபாய் பரிசு வென்றிருப்பதாக எஸ்.எம்.எஸ். மூலமாகவும், அல்லது நீங்கள் லாட்டரியில் 5 லட்சம் பவுண்டுகள் அல்லது டாலர் கள் பரிசு பெற்றிருப்பதாக உங்கள் இ-மெயில் முகவரிக்கும் தகவல் அனுப்பி, மேற்கொண்டு விபரம் அறிய ஒரு குறிப்பிட்ட இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு உங்கள் மொபைல் போனுக்கோ இ-மெயில் முகவரிக்கோ அடிக்கடி தகவல் வரும்.
 
இதை உண்மை யென நம்பி அந்த இ-மெயில் முகவரியை தொடர்பு கொண்டால் உங்களுக்கான கோடிக்கணக்கான ரூபாய் பரிசு தயாராக இருப்பதா கவும், அதை முறைப்படி அனுப்ப சேவை வரி, சுங்க வரி, கலால் வரி, பேங்க் கிளியரன்ஸ் கமிஷன் ஆகியவற்றுக்காக ரூபாய் 2 லட்சமோ 3 லட்சமோ ஒரு குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் செலுத்துமாறும் உங்களுக்கு தகவல் கிடைக்கும்.   அதை நம்பி நீங்கள் பணத்தை வங்கிக் கணக்கில் போட்டால், இன்னும் கொஞ்சம் பணம் போடச் சொல்லி மீண்டும் உங்கள் இ-மெயிலுக்கு தகவல் வரும். இப்படியே, கொஞ்சம் கொஞ்சமாக உங்களிடமிருந்து கறந்து விட்டு, நீங்கள் ஏமாந்து விட்டதாக உணரும்போது தொடர்பு நின்று விடும்.
 
இவ்வாறு ஏமாந்தவர்கள் அவ்வப்போது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்து புகார் கொடுத்த வண்ணம் இருக்கிறார்கள். கடைசியாக புகார் கொடுக்க வந்தவர் ஏமாந்த தொகை ரூ.35 லட்சம் ஆகும். மிக நெருங்கிய நண்பர்கள் (அ) உறவினர்களே 5000 ரூபாயோ 10,000 ரூபாயோ கடன் கொடுக்க முன்பின் யோசிக்கும் இந்தக் காலத்தில் முகம் தெரியாத யாரோ ஒருவர், விண்ணப்பிக்காத போட்டிக்கும் கலந்து கொள்ளாத லாட்டரியிலும் கிடைக்கும் கோடிக்கணக்கான பணத்தை உங்களுக்கு அனுப்பப்போவதாக கூறுவதை சிறிதும் நம்ப வேண்டாம்.
 
இம்மாதிரி எஸ்.எம்.எஸ்.களையும் இ-மெயில்களையும் புறக்கணிக்க வேண்டும்.  இதேபோன்று, கணக்கு வைத்திருக்கும் வங்கியிலிருந்தோ, ரிசர்வ் வங்கியிலிருந்தோ, செக் செய்வதற்காக அல்லது ஆடிட் நோக்கத்திற்காக அல்லது பாதுகாப்பு காரணத்துக்காக அல்லது கணக்கு சரி செய்வதற்காக என்று உங்கள் வங்கிக்கணக்கு விபரங்களைக் கேட்டு உங்களுக்கு இ-மெயில் வந்தாலும் அல்லது அநாதை ஆசிரமத்திற்கு உங்களை செயலராக நியமிப்பதாக இ-மெயில் வந்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
 
இவ்வாறு உங்களுக்கு வரும் இ-மெயில்கள் போலியா னவை. ரிசர்வ் வங்கி தனி நபர்களின் வங்கிக் கணக்கு விஷயங்களில் நேரடியாக தலையிடுவதில்லை. உங்கள் வங்கிக்கே உங்கள் கணக்கின் ரகசிய குறியீடு எண்களைக் கேட்க அதிகாரமில்லை. இதை நம்பி உங்கள் கணக்கு விபரங்களை அளித்தால் உடனடியாக உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணம் முழு வதும் சுருட்டப்பட்டு விடும். பொதுவாக, விளம்பரங்களை நம்பி, முறையாக விசாரிக்காமல் வேலை வாய்ப்புக்காகவோ, வேறு சேவைகளுக்காகவோ ஆன்லைனில் பணம் அனுப்பு வதும் தேவையற்றது.
 
பணப் பரிவர்த்தனை தொடர்பான சைபர் குற்றங்களில் எதிரிகள் பிடிபட்டாலும் பணத்தை மீட்பது கடினம். எனவே, சைபர் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.